Saturday, February 7, 2015

கனியிடை ஏறிய சுளையும்










கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் 
கழையிடை ஏறிய சாறும், 
பனி மலர் ஏறிய தேனும் - காய்ச்சும் 
பாகிடை ஏறிய சுவையும்;; 
நனிபசு பொழியும் பாலும் - தென்னை 
நல்கிய குளிரிள நீரும், 
இனியன என்பேன் எனினும் - தமிழை 
என்னுயிர் என்பேன் கண்டீர்! 

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப் 
புனலிடை வாய்க்கும் கலியும், 
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை 
கொட்டிடும் அமுதப் பண்ணும், 
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள் 
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும் 
விழைகுவ னேனும், தமிழும் - நானும் 
மெய்யாய் உடலுயிர் கண்டீர்! 

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம் 
பக்கத் துறவின் முறையார் 
தயைமிகு உடையாள் அன்னை - என்னைச் 
சந்ததம் மறவாத் தந்தை, 
குயில் போற் பேசிடும் மனையாள் - அன்பைக் 
கொட்டி வளர்க்கும் பிள்ளை, 
அயலவராகும் வண்ணம் - தமிழ்என் 
அறிவினில் உறைதல் கண்டீர்! 

நிலச்சுடர் மணி வானம் - ஆங்கே 
நிறையக் குளிர் வெண் ணிலவாம், 
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே 
கடல் மேல் எல்லாம் ஒளியாம், 
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல 
மலைகளின் இன்பக் காட்சி, 
மேலென எழுதும் கவிஞர் - தமிழின் 
விந்தையை எழுதத் தரமோ? 

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய் 
தேக்கிய கறியின் வகையும் 
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித் 
தயிரோடு மிளகின் சாறும், 
நன்மதுரஞ் செய் கிழங்கு - காணில் 
நாவிலி னித்திடும் அப்பம், 
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை 
உணர்வை வளர்ப்பது தமிழே!

Thursday, December 11, 2014

மெல்லத் தமிழ் இனிச் சாகும்

”மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று பாரதியார் அன்றே சொன்னார் ” என்ற வரிகளை அவ்வப்போது கேட்க நேரிடும். பாரதி கவிதையை முழுதும் படிக்காமல் அவ்வாறு சொல்ல நேரிடுகிறது. மெல்லத் தமிழினிச் சாகும் என்பது பாரதியின் கருத்தன்று. பாரதியின் காலத்திலிருந்த பேதையருள் ஒருவன் தமிழின் திறமையைக் கேள்விக்குள்ளாக்கி அவ்வாறு கூறினான். இதனால் மனம் நொந்த பாரதியார் தமிழன்னை தன் மைந்தருக்குரைப்பதாய் எழுதிய கவிதையில் தான் இவ்வாறு கூறியுள்ளார். கேளுங்கள்.

Tuesday, December 2, 2014

குறளமுதம் - புது முயற்சி


திருவள்ளுவர் பிறந்தநாள் நாடு முழுதும் உள்ள பள்ளிகளில் கொண்டாடப்பட உள்ளது என்பதைக் கேட்ட போது கட்டற்ற களிப்புண்டாயிற்று. வட இந்தியர்களுக்கும் புரியும் வகையில் திருக்குறளை எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்தேன். சோதனை முயற்சியாகத் தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளில் திருக்குறளைத் தந்துள்ளேன். இன்னுமதிக மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்பது என் பேரவா. திக்கெட்டும் திருக்குறளின் மேன்மை பரப்பிடுவோம்.

திருமந்திரம் - ஒலி வடிவில்




நேரம் கிடைக்கும் போது  இன்னுமதிகப் பாடல்களைச் சேர்த்திடுவேன். இணைந்திருங்கள். 

Monday, August 16, 2010

ஒரு மம்மட்டி மண்ணெடுத்து... (கொங்கு மண்டலப் பாடல்)

ஒரு மம்மட்டி மண்ணெடுத்து...
ஒண்றரைத் தோட்டம் கரும்பு வெட்டி ...

கரும்பே வா, கரும்பே வா,
கருங்கொளத்து மீனே வா!

வா! வா! மணிப்புறா,
வடக்கே தெற்கே போய்ப்பார்ப்போம்.

அங்கொரு செண்டுமல்லி
அடுக்கடுக்காய்ப் பூத்திருக்கு
தேசமெங்கும் படர்ந்திருக்கு
-------------
----------
தேவலோகம் போன கிளி ஆண்கிளியோ பெண்கிளியோ
ஆண்கிளியும் அல்ல மச்சான்
பெண்கிளியும் அல்ல மச்சான்
தானே வளரும் கிளி
தேவ லோகம் போன கிளி

கூறியவர்: மரு.கோகிலா - திருப்பூர் (கொங்கு மண்டலம்)

Sunday, August 15, 2010

சொலவடைகள் - tongue twisters

  1. ஓடுற நரியில ஒரு நரி கிழநரி, கிழநரி  முதுகுல ஒரு பிடி நரை மயிர்
  2. கொக்கு நெட்டைக் கொக்கு, நெட்டைக் கொக்கு இட்ட முட்ட கட்டை முட்டை
  3. பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே  பைத்தியங்களுக்கு  வைத்தியம்
    பார்க்கிற வைத்தியருக்கு  பைத்தியம்  பிடித்தா  எந்த
    பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்  பைத்தியங்களுக்கு வைத்தியம்
    பார்க்கிற வைத்தியர்  வந்து  அந்த  பைத்தியத்துக்கு  வைத்தியம் பார்ப்பார் ?
  4. சாலை வழியே சென்ற ஏழைக் கிழவி ஒருத்தி வாழைப்பழத் தோல் வழுக்கிக் கீழே விழுந்தாள்
  5. யாரு ‌தெச்ச சட்டை ? தாத்தா தெச்ச சட்டை.
  6. சைக்கிள் ரேலி போலொரு லாரி ரேலி (கன்னியாகுமரி மாவட்டம்)
  7. லாரி நிறைய ராலு மீனு (கன்னியாகுமரி மாவட்டம்)
     

ஆத்தங்கரை ஓரத்திலே ஆயிரந்தோப்பெந் தோப்பு

ஆத்தங்கரை ஓரத்திலே ஆயிரந்தோப்பு எந்தோப்பு !
சொல்லிக் கொடுத்தது சந்தணமா ?
சந்தணமென்ன நாறாதா ?
 நாறக்கும் கருவாடா ?
கருவாடென்ன காயாதா ?
 காயக்கும் தட்டானா ?
தட்டானென்ன கொட்டாதா ?
 கொட்டக்கும் கோயிலா ?
கோயில் என்ன கும்பிடாதா ?
 கும்பிடக்கும் ராசாவா?
ராசாவென்ன பேசாதா ?
 பேசக்கும் பல்லியா?
பல்லி என்ன பதுங்காதா ?
 பதுங்கக்கும் கள்ளனா ?
கள்ளன் என்ன ஓடாதா?
 ஓடக்கும் தண்ணியா ?
தண்ணி என்ன உடையாதா ?
 உடையக்கும் தேங்காயா ?
தேங்காய் என்ன தூங்காதா ?
 தூங்கக்கும் வௌவாலா ?
வௌவாலென்ன கவ்வாதா ?
 கவ்வக்கும் நாயா ?
நாயென்ன குலைக்காதா ?
 குலை கக்கும் வாழையா ?
வாழையென்ன  வழுக்காதா ?
 வழுக்கக்கும் பாம்பா?
பாம்பென்ன கொத்தாதா?
 கொத்தக்கும் கோழியா?
கோழி என்ன கூவாதா ?
 கூவக்கும் நரியா?
நரியென்ன ஊளம் போடாதா ?
......

கூறியவர்: நே.சபினா - செவிலியர்
கருங்கல், கன்னியாகுமரி மாவட்டம்